போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது
*20 ஆண்டுகளாக போலி பெயரில் பாஸ்போர்ட் பயன்படுத்தி சவூதியில் வேலை: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது*
திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பதாக போலி முகவரி மற்றும் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, கடந்த 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த நபர், சொந்த ஊருக்குத் திரும்பியபோது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உவரி காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பெண் முதல் நிலை காவலர் செல்வகனி, வெளிநாட்டில் இருந்து புதுப்பிப்புக்காக வந்திருந்த ஒரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆய்வு செய்தபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சவூதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்டிருந்த அந்தப் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில், திருநெல்வேலி மாவட்டம் உவரி, பரதர் உவரி வடக்குத் தெருவைச் சேர்ந்த 'ஜார்ஜ், தந்தை பெயர் போரஸ்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, கடந்த ஜூலை 2-ஆம் தேதி அந்த முகவரியில் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த முகவரியில் ஜார்ஜ் என்ற பெயருடைய நபர் உண்மையாகவே வசித்து வந்ததும், அவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவுடன் இருப்பதும் தெரியவந்தது.
விண்ணப்பத்தில் இருந்த புகைப்படத்தைக் காட்டி விசாரித்தபோது, அதில் இருப்பவர் ஜார்ஜ் அல்ல என்பதும், அவர் 'பனி செல்வின்' என்ற நபர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் வசித்துவிட்டு, பின்னர் மணப்பாடு பகுதிக்குக் குடிபெயர்ந்ததாகவும் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு புகைப்படத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், செல்வனுடைய குடும்பத்தினர் வசித்து வரும் முகவரி கண்டறியப்பட்டது. பனி செல்வனுடைய மனைவி சரண்யாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, தனது கணவரின் முழுப்பெயர் பனி செல்வின் என்றும், அவரது தந்தை பெயர் லாசர் என்றும் தெரிவித்தார். மேலும், தன் கணவர் கடந்த 20 ஆண்டுகளாக ஜார்ஜ் என்ற பெயரையும், உவரி முகவரியையும் பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற்று, சவூதி அரேபியாவில் கடல் சார்ந்த தொழிலில் (மீனவராக) ஈடுபட்டு வருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
பின்னர் பனி செல்வனுடைய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அவர் தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு மீனவர் காலனியைச் சேர்ந்த லாசரின் மகன் பனி செல்வின் என்பது உறுதியானது.
இதையடுத்து, உண்மையான அடையாளத்தை மறைத்து, போலி பெயரிலும் முகவரியிலும் பாஸ்போர்ட் பெற்று பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த பனி செல்வின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், உவரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நதியா, பனி செல்வின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 177, 419, 465, 468, 471 ஆகிய பிரிவுகள் மற்றும் பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் 12(1)(b) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
பாஸ்போர்ட் புதுப்பிப்பு சரிபார்ப்பின் போது உவரி காவல் நிலைய காவலர்கள் நடத்திய தீவிர விசாரணையால், இருபது ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த அடையாள மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள பனி செல்வின் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Comments
Post a Comment