போதையின் பிடியில் தமிழகம்.
“அவளுக்கும் ஊத்திக் கொடு…” – திருவாரூர் அரசு கல்லூரியில் மது அருந்திய மாணவிகள்; பெற்றோர்கள் அதிர்ச்சி.
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு பள்ளி மாணவிகள் மது அருந்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த விவகாரம் அடங்குவதற்குள் தற்போது திருவாரூரில் அரசு கல்லூரி மாணவிகள் பீர் குடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே கிடாரம் கொண்டான் பகுதியில் அமைந்துள்ள தியாகராஜ கோயில் வளாகத்தில் அரசு கலைக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
வகுப்பறையிலேயே மது அருந்திய மாணவிகள்
இந்தக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கான நடன ஒத்திகையின் போது, ஐந்து பேருக்கும் மேற்பட்ட மாணவிகளில் சிலர் வகுப்பறைக்குள் அமர்ந்தபடியே பீர் குடித்ததாக கூறப்படுகிறது. இதனை பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில்,
மாணவிகள் கையில் பீர் பாட்டில்களை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி குடிப்பதும், “அவங்களுக்கும் கொடுங்க” என்று பேசிக்கொள்வதும் இடம்பெற்றுள்ளது. மேலும், “குடிச்சுட்டு மயங்கிடக்கூடாது… ஒழுங்கா ஆடணும்” என்று ஒருவர் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் பார்ப்பவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெற்றோர்கள் அதிர்ச்சி – நிர்வாகம் மௌனம்
சுமார் ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ வெளியாகிய நிலையில், பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளனர். இதுதொடர்பாக இதுவரை கல்லூரி நிர்வாகம் சார்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை.
இதுபோன்ற செயல்கள் மாணவர்களின் எதிர்காலத்தையும் சமூக ஒழுங்கையும் பாதிக்கும் என்பதால், ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து உரிய கண்காணிப்பும் வழிகாட்டுதலும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நெல்லை சம்பவம் இன்னும் மறையாத நிலையில்…
கடந்த சில தினங்களுக்கு முன்பு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சீருடையிலேயே அமர்ந்து மாணவிகள் மது குடித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில் 6 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அந்த சம்பவத்தின் தாக்கம் இன்னும் நீங்காத நிலையில், தற்போது திருவாரூரில் கல்லூரி மாணவிகள் மது அருந்திய காட்சிகள் வெளியாகியுள்ளது, “சமூகம் எதை நோக்கி செல்கிறது?” என்ற கேள்வியை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சமூகப் பொறுப்பும் உளவியல் ஆலோசனையும் அவசியம்.
திரைப்படங்களில் மது அருந்துவதை சாதாரணமாக காட்சிப்படுத்தும் போக்கும், அதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், மாணவர்களின் தவறான பழக்கங்களுக்கு சினிமாவை மட்டும் காரணமாகக் கூறிவிட முடியாது என்றும், இதில் பெற்றோர்களின் பங்கும் முக்கியமானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வீட்டில் பெரியவர்கள் குடிப்பதை குழந்தைகள் சிறுவயதிலிருந்தே பார்ப்பதால், இத்தகைய பழக்கங்களுக்கு அவர்கள் உந்தப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, குடும்பத்தினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மாணவ மாணவிகளுக்கு உரிய உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


Comments
Post a Comment