எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?
தற்போது உலக அளவில் வாகன போக்குவரத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
மக்கள் பலரும் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள் நிரப்பும் வாகனங்களை தவிர்த்து தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி உள்ளனர். இதனால் அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் பல புதுவித மாடல்களில் எலக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் களம் இறக்கி வருகின்றனர்.
ஆரம்ப காலங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்ற எரிபொருள் நிரப்பும் வாகனங்களை விட செலவுகள் குறைந்ததாகவும் வாகனங்களின் பராமரிப்பு செலவு மற்றும் வாகனங்களின் விலையும் சற்று குறைவாகவே இருந்தது.
ஆனால் தற்போது உலகில் உள்ள முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல வாகனங்களையும் பலவித சிறப்பம்சங்களுடன் தொடர்ந்து களம் இறக்கி வரும் நிலையில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் விலை சந்தையில் அதிகரித்துக் கொண்டே செல்வதை பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம் வாகனங்களுக்கு தேவையில்லாத பல சிறப்பு அம்சங்களையும் வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து கொள்ளாமலேயே அளித்து வாகனங்களின் விலையை உயர்த்தும் உத்தியை கையாளுகின்றனர்.
எடுத்துக்காட்டாக இருசக்கர வாகனங்களில் சாவி இல்லாமல் வண்டியை இயக்கும் தொழில்நுட்பம் க்ரூஸ் கண்ட்ரோல் தொழில்நுட்பம் ப்ளூடூத் இணைப்பு தொடுதிரை வசதி என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாக வடிவமைக்கின்றனர்.
இதில் பல வசதிகளை பல வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது போன்ற பல தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளதால் வாகனங்களின் பராமரிப்பு செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாகன விற்பனை ஷோரூம்களை நடத்துபவர்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் சிறிய மாதாந்திர பராமரிப்புக்கு கூட பெரும் தொகையை வசூலிக்கின்றனர்.
இதைப் பற்றி வாகன வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பும் பொழுது தற்போது விற்பனை நிலையங்களில் இருக்கும் விற்பனையாளர்கள் பெட்ரோல் வாகனங்களைப் போலவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பராமரிப்பு செலவு செய்துதான் ஆக வேண்டும். பராமரிப்பு செலவு குறையும் என்று நாங்கள் கூறவில்லை என்று முன்னுக்குப் பின் முரணாக பேசுகின்றனர்.
இதனால் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கிய பலரும் தற்போது தங்கள் மாதாந்திர செலவுகளை சிக்கனப்படுத்தும் நோக்கில் வாகனங்களை வாங்கினோம். ஆனால் தற்போது இப்படி அதிக செலவு செய்ய வேண்டியது இருக்கிறது என்று புலம்புகின்றனர்.
நீங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்று விரும்பும் நபர் என்றால் மோட்டார் வாகன வல்லுனர்கள் கூறும் முக்கிய அறிவுரை என்னவென்றால் அளவுக்கு அதிகமான தொழில்நுட்பங்கள் கொண்ட வாகனங்களைத் தவிர்த்து விலை குறைவான அடிப்படை வசதிகள் கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதே சிறந்தது என்று கூறுகின்றனர்.
காரணம் அடிப்படை வசதிகள் கொண்ட வாகனங்கள் விலை குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பராமரிப்பு செலவு மிகவும் குறைவானதாக இருக்கும்.
எலக்ட்ரிக் கார்களை உருவாக்கும் நிறுவனங்கள் தங்கள் கார்களை விற்பனை செய்வதில் காட்டும் ஆர்வத்தை சார்ஜிங் ஸ்டேஷனுக்கு உருவாக்குவதில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
சில இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருந்தாலும் நீண்ட வாகன வரிசை இருப்பதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் எலக்ட்ரிக் கார்களை வெளியிடங்களில் அதிவேக சார்ஜிங் வசதியில் சார்ஜ் செய்யும் பொழுது அதற்கான கட்டணம் எரிபொருள் நிரப்பும் வாகனங்களுக்கு உண்டான கட்டணத்திற்கு கிட்டத்தட்ட நிகராக உள்ளதாக வாகன உரிமையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எரிபொருள் வாகனங்களை விட பல மடங்கு விலை அதிகம் கொடுத்து வாங்கும் எலக்ட்ரிக் வாகனங்களினால் எந்த வகையிலும் தங்களுக்கு சேமிப்பு இல்லை என்று பல எலக்ட்ரிக் கார் உரிமையாளர்களும் தெரிவிக்கின்றனர்.




Comments
Post a Comment